சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-110, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (நவ., 14) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-110, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (நவ., 14) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பேசுகையில்:-
தமிழகத்தில் தான், பொது சுகாதாரம் மற்றும் ஆரம்ப சுகாதார சேவைக்கென தனியாக ஒரு இயக்ககம் ஏற்படுத்தப்பட்ட பெருமையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அம்மாவின் அரசு பெற்றுள்ளது. நமது மாநிலத்தை, மேலும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக அம்மாவின் அரசு, பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வாறான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று, பள்ளி மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமித்தல் ஒன்றாகும்.
ஏன் நாம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம் ?, பள்ளி மாணவர்களிலிருந்து ஏன் இத்திட்டத்தை கொண்டு வந்தோம்? என்றால், பெரிய பெரிய தலைவர்கள் கவிஞர்கள் அனைவருமே, எந்த ஒரு திட்டத்தையும் குழந்தைகளிடமிருந்து ஆரம்பித்தால் அத்திட்டம் வெற்றியாக முடியும் என்று கூறியுள்ளனர், மாணவ மாணவியர்களிடம், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில், “சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையிலும், “சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள்” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் “பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவ, மாணவியர்கள் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு சுகாதார தூதுவர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்த ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் 20 ஆயிரம் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் மூலம் வீதிகள் வழியாக சென்று காய்ச்சல் தடுப்பு, தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
ஆகவே, சென்னை மாநகராட்சியின், சுகாதார தூதுவர்களான நீங்கள், ஒவ்வொரு வீட்டிலும் தேவையில்லாத கழிவுகளை வைத்திருக்கக்கூடாது. தண்ணீரை தேவையில்லாமல் தேக்கி வைக்கக்கூடாது, வீட்டைச் சுத்தப்படுத்தி, கொசுக்கள் வீட்டிற்குள் வர விடாமலும், வெளியில் உற்பத்தி ஆகாமலும் அனைவரும் பார்த்துக் கொள்ள, ஒவ்வொரு வீட்டிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மழலையர் பள்ளிகளில் மாண்டிசோரி கல்வி முறையை செயல்படுத்திடும் வகையில் இன்று பயிற்சி முடித்த 38 சென்னை பள்ளிகளை சார்ந்த 73 ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், சுகாதார தூதுவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து நமது மாநிலத்தை தூய்மை மாநிலத்தில் முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர், சிறந்த 3 மாணவ சுகாதார தூதுவர்களைப் பாராட்டி, கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, துணை ஆணையாளர் (கல்வி) பி.குமாரவேல் பாண்டியன், மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதர், கல்வி அலுவலர் பாரதிதாசன், மண்டல அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.