கோவை: அதிமுக கொடி கம்பம் சாய்ந்து இளம்பெண் விபத்துக்குள்ளாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: அதிமுக கொடி கம்பம் சாய்ந்து இளம்பெண் விபத்துக்குள்ளாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 12ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், ராஜேஸ்வரி விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அனுமதியின்றி நடப்பட்ட அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதற்கான தடயங்களை காவல்துறை அழிக்க முயல்வதாகவும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் குற்றம்சாட்டினார். மேலும், காவல் துறை அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.