கோவை: கோவை இருகூர் அருகே கல்லூரி மாணவர்கள் 5 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக வந்த ரயில் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை இருகூர் அருகே கல்லூரி மாணவர்கள் 5 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக வந்த ரயில் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் அருகே உள்ள ஆர்விஎஸ் கல்லூரியில் படிக்கும் மாணவனும், அதே கல்லூரியில் மூன்றாண்டுகள் முடித்துவிட்டு ஹரியர் தேர்வு எழுத வந்த மாணவர்களும் நேற்றிரவு மது குடிக்க டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர். பின்னர் மது அருந்திய ஐந்து பேரும் கடை சாத்திய பின்பு தங்களது அறைக்கு சென்றனர்.
இந்த நிலையில், மீண்டும் மது அருந்துவதற்காக ஐந்து பேரும் ராவுத்தர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு மதுபாட்டில்களை வாங்கிய மாணவர்கள் இருகூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அந்த வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் "ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்" அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதில், போதை தலைக்கேறிய மாணவர்களுக்கு ரயில் வருவது தெரியவில்லை. இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் 5 பேர் மீதும் ரயில் மோதியது.
இதில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த சித்திக் ராஜா (23), நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (22), ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கௌதம் (21) மற்றும் கருப்புசாமி (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். படுகாயமடைந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வேஸ்வரனை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.