கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் மக்களை துன்புறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் மக்களை துன்புறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
காட்டு யானை அரிசி ராஜா தாக்கியதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் நவமலை, அர்த்தநாரிபாளையம் பகுதிகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரிசி ராஜாவைப் பிடிக்க வேண்டும் என பொது மக்கள் நாலு முக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த சனிக்கிழமை காட்டு யானையை பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட கும்கி யானை பாரிக்கு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்ததால் யானை பாகனுக்கு அடிபணிய மறுத்தது. இதனால், கும்கி யானை பாரி லாரியில் ஏற்றப்பட்டு டாப்சிலிப்பில் உள்ள கோழிக்கமுதி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, மதம் பிடித்த பாரிக்கு பதிலாக பெருமாள் மலைப்பகுதிக்கு கும்கி கபில்தேவ் கொண்டு வரப்பட்டது.
அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், இரவு நேரத்தில் வெளியே வந்த போது காட்டு யானை அரிசிராஜா பிடிபட்டது.

பருத்தியூர் வனப்பகுதியில் நின்று கொண்டு இருந்த காட்டு யானை அரிசி ராஜாவுக்கு வனத்துறை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கலீம், கபில்தேவ் ஆகிய கும்கி யானைகள் அரிசி ராஜாவின் கழுத்தில் கயிறுகளை கட்டி அதனை கட்டுப்படுத்தின.
கடந்த 2017ம் ஆண்டு ஜீன் மாதம் 4 பேரை கொன்றதால் வெள்ளலூர் பகுதியில் பிடிக்கப்பட்டு வரகளியாறுவில் விடுவிக்கப்பட்ட அதே யானைதான், அரிசி ராஜா யானை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட அரிசி ராஜா, டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. யானைகள் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வளர்ப்பு யானையாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. காட்டு யானை பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.