கோவை: பொள்ளாச்சி அடுத்து அர்த்தனாரிபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அடுத்து அர்த்தனாரிபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்து அர்த்தனாரிபாளையத்தில் சாப்பாட்டு ராமன் என்னும் அரிசி யானையை கடந்த 4 மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது. இதில் 6 வயது சிறுமி உள்பட 3 பேர் பலியானர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி கொன்றது. மேலும், ரோட்டில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த திருமாத்தாள் என்ற மூதாட்டியை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அரிசி ராஜாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த அர்த்தனாரிபாளையம் பகுதி பொதுமக்கள், நாலு மூக்கு சுங்கம் பகுதியில் பல மணிநேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையைப் பிடித்து வரகளியார் அடர்ந்த காட்டில் விடுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர்.
வனக்கால்நடை உதவி இயக்குநர் மனோகரன், வனக்கால்நடை மருத்துவர்கள் சுகுமார், கலைவாணன் ஆகியோரை கொண்ட மருத்துவக் குழுவினர், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரக அலுவலர்கள் காசிலிங்கம், சக்திவேல், நவீன்குமார் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அட்டகாசம் செய்யும் யானை தோட்டப்பகுதி மற்றும் ஊருக்குள் வருவதை தடுக்க, 70க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரும் இணைந்து தனித்தனி வாகனங்களில் ரோந்து செல்வதை தொடர்ந்துள்ளனர். இதற்காக டாப் சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை வரவழைக்கப்பட்டு அர்த்தனாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கும்கி யானை பாரிக்கு நேற்று இரவு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்ததால் யானை பாகனுக்கு அடிபணிய மறுத்தது. இதனால், கும்கி யானை பாரி லாரியில் ஏற்றப்பட்டு டாப்சிலிப்பில் உள்ள கோழிக்கமுதி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, மதம் பிடித்த பாரிக்கு பதில் பெருமாள் மலைப்பகுதிக்கு கும்கி கபில்தேவ் கொண்டு வரப்பட்டுள்ளது. கலீமும், கபில்தேவும் அரிசி யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.