கோவை: பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரிபாளையத்தில் மழை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் "அரிசி ராஜா" காட்டு யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரிபாளையத்தில் மழை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் "அரிசி ராஜா" காட்டு யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரிபாளையத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி கொன்றது. மேலும், ரோட்டில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த திருமாத்தாள் என்ற மூதாட்டியை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அர்த்தனாரிபாளையம் பகுதி பொதுமக்கள், நாலு மூக்கு சுங்கம் பகுதியில் பல மணிநேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையைப் பிடித்து வரகளியார் அடர்ந்த காட்டில் விடுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர்.

இதில் டாப்சிலிப்பில் உள்ள கோழிக்கமுத்தி முகாமில் இருந்து கலீம் மற்றும் பாரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் அர்த்தனாரிபாளையம் கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் அந்த ஒற்றை யானை அர்த்தனாரிபாளையம் கிராம பகுதிக்கு வந்துள்ளது. அதனைப் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின் அந்த யானை குண்டுவருட்டி பள்ளம் என்ற இடத்திற்கு சென்றது. ஆனால் அடர்ந்த காட்டிற்குள் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டது.
இந்நிலையில், அட்டகாசம் செய்யும் யானை தோட்டப்பகுதி மற்றும் ஊருக்குள் வருவதை தடுக்க, 70க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரும் இணைந்து தனித்தனி வாகனங்களில் ரோந்து செல்வதை தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, அதிகப்படியான மழை காரணமாக அரிசி ராஜா யானையை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் யானையை பிடித்து இடம் மாற்றப்படும் என்று தெரிவித்தார்.