கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் கட்டியை நவீன முறையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, பத்து நாட்களாகியும் சிகிச்சையை கொடுக்காமல் நோயாளியை அலைக்கழிக்கும் மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் கட்டியை நவீன முறையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, பத்து நாட்களாகியும் சிகிச்சையை கொடுக்காமல் நோயாளியை அலைக்கழிக்கும் மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 5 ஆயிரம் முதல் 7000 வெளி நோயாளிகளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல, இங்கு கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீரம்மாள், வயிற்று வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் ராட்சத கேன்சர் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதனை ரீனஆஞ்கியோ எம்பாலிஷேசன் மூலம் அந்த கட்டியின் அளவு மற்றும் எடையை குறைத்து, கட்டி 8 சென்டிமீட்டராக குறைந்த பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்கள் வெளியே வந்த போது, பத்து நாட்களுக்கு மேலாக அலைக்கழிக்கப்பட்டு வரும் நோயாளியின் உறவினர்கள் கதறி அழுதபடி சிகிச்சை வேண்டி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து நோயாளியின் மகன் சதீஷ் கூறும்போது:-
எனது தந்தை அந்தோணியை கோவை அரசு மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு முன்பு அனுமதித்தேன். இதுவரை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர் உதவி தேவைப்படுகிறது. நோயாளியை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் தள்ளும் பணியாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அதே போல, ஸ்கேன் எடுக்க ஸ்கேன் நிலையத்தினரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் மூன்று பேரும் பல காரணங்களைச் சொல்லி இன்னும் எம்ஆர்ஐ ஸ்கேன் கூட எடுக்க முயற்சிக்கவில்லை என்றார்.

மேலும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதற்காக தினமும் தனது தந்தைக்கு உணவு கூட கொடுக்கவில்லை என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட, தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளதாக கூறிய அவர், ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கும் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் கேட்கின்றனர் என்றும் இல்லையென்றால் ஸ்ட்ரெச்சர் தர மறுப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.