கோவை: வால்பாறையில் காலில் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த 8 மாத குட்டி யானையின் அருகிலேயே அதன் தாய் யானையும் நின்று கொண்டிருந்ததால், வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாததால் குட்டி யானை பரிதாபமாக பலியானது.
கோவை: வால்பாறையில் காலில் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த 8 மாத குட்டி யானையின் அருகிலேயே அதன் தாய் யானையும் நின்று கொண்டிருந்ததால், வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாததால் குட்டி யானை பரிதாபமாக பலியானது.
கோவை மாவட்டம் வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. இதில் ஒரு தாய் யானையுடன் வந்த அதன் 8 மாத குட்டி யானைக்கு காலில் ஊனம் ஏற்பட்டு அதே பகுதியில் கடந்த நான்கு வாரமாக மிகவும் அவதிப்பட்டு வந்தது.
குட்டி யானைக்கு காலில் கட்டி இருந்ததால் உணவு தேட முடியாமல் சோர்வடைந்து தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தது. தாய் யானையும் குட்டியை பிரிய முடியாமல் அங்கேயே முகாமிட்டிருந்தது.
இதனால் குட்டி யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாமல் காட்டு யானையை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று குட்டி யானை இறந்தது தெரிய வந்தது. பின்னர், 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வாகனம் மூலம் தாய் யானையை விரட்டிய பின், வனச்சரகர் நடராஜன், வனவர் ஆனந்தன் கால்நடை மருத்துவர் மெய்யரசன் முன்னிலையில் யானை குட்டியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆழமான குழி வெட்டப்பட்டு குட்டி யானை புதைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக போராடி வந்த யானை குட்டி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.