கோவை: தமிழக சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்கிடமிருந்து பல்வேறு கொரில்லா பயிற்சிகள் குறித்த கூட்டங்களின் பிரசுரங்களும், வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை: தமிழக சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக்கிடமிருந்து பல்வேறு கொரில்லா பயிற்சிகள் குறித்த கூட்டங்களின் பிரசுரங்களும், வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட்ட வனப்பகுதி போன்ற இடங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 9ம் தேதி சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் ஜான் தலைமையிலான தலைமை காவலர்கள் பிரபு, மணிமாறன், மகேஷ்வர மூர்த்தி, தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவும் அதேபோல, உதவி ஆய்வாளர் செல்வ சுரேஷ் பிரிட்டோ தலைமையிலான குழுவினர் துணை கண்காணிப்பாளர் பண்பாளன் மேற்பார்வையில் தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சேம்பு கரை - பெருமாள் முடி பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் சிறப்பு அதிரடிப்படையினர் வருவதைக் கண்டு தப்பியோட முற்பட்டனர். அப்போது, அதில் ஒரு ஆண் பள்ளத்தில் விழுந்தார். மற்ற இருவரும் தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படையினர் பள்ளத்தில் விழுந்தவரை மீட்டு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாவோயிஸ்ட் கைதும் அவரின் கோஷங்களும்;-
கீழே விழுந்தவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்ததில் அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவரின் மற்றொரு பெயர் சந்துரு என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" எனவும், "சிபிஐ மாவோயிஸ்ட் ஜிந்தாபாத்" எனவும், "பீப்பிள் வார் ஜிந்தாபாத்" மற்றும் "மாவோ பாத் ஜிந்தாபாத்"எனவும் கோசம் எழுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து "பீப்பிள் லிபரேஷன் கொரிலா ஆர்மியின்" சென்ட்ரல் கமிட்டி மெம்பர் ஆகிய என்னை நெருங்கினால் "தமிழ்நாடு சிதறும்" என்றும் "வெடிகுண்டு புரட்சி வெடிக்கும்" என்றும் ஆக்ரோசமாக தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்;-
கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டிடம் இருந்து ஒற்றைக் குழல் நாட்டுத்துப்பாக்கி ( எஸ்.எஸ்.பி.எல் )முதலில் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த கருப்பு நிற ரெக்ஸின் பையை சோதனை செய்தனர்.
அதில், " REX90 Explosive (IER CLASS 2)diameter25MM Weight 125GMS-4 இவை வெள்ளை நிற துணியில் சுற்றப்பட்டு இருந்தது. அதேபோல கருப்பு நிற ஒயர் ஒரு ரோல் இருந்தது. கனெக்சன் தருவதற்கு பேட்டரி, வெடிகுண்டை வெடிக்க பயன்படுத்தும் கார்டெக்ஸ் சிவப்புக்கலர் ஒயர், பால்ரஸ் குண்டுகள் சுமார் 100 கிராம், கருப்பு கலர் செல்லோ டேப், தோட்டாக்கள் 16, டெட்டனேட்டர் எலக்ட்ரிக்கல் 4, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மாவோயிஸ்ட் கூட்டங்கள் குறித்த பிரசுரங்கள்;-
கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா மாவோயிஸ்ட் தண்டகாரண்யா ஸ்பெஷல் சோனல் கமிட்டி ஏப்ரல் 2, 2013 என்று அச்சடிக்கப்பட்ட பிரசுரமும், கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா மாவோயிஸ்ட் சென்ட்ரல் கமிட்டி 10 நவம்பர் என்ற பிரசுரமும், காட்டு தீ பீப்பிள் லிபெரேஷன் கொரில்லா ஆர்மி கபினி விங்க் நியூஸ் புல்லட்டின் 21வது எடிசன் 2015 என்ற மூன்று தாள்கள் என பல கூட்டங்கள், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்தியில் அச்சடிக்கப்பட்ட தாள்கள், ஜெராக்ஸ் நகல்கள், வரைவுத்தால் பட விளக்கங்களுடன் குறிப்பிடப்பட்ட முக்கிய ஆவணங்கள், தீபக்கின் ஆயுதப் பயிற்சியை எடுத்துக் காட்டும் போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோ, ஏகே 47 ஆயுதத்தை கையாளும் விதம் குறித்த சித்தரிப்புகள் ஆகியவையும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
யு ஏ பி ஏ சட்டம்;-
121 (A) IPC &16.18.20.UAPA act 1967 25(A), Arms act 1985 4 of Explosive substances act 1908 -கீழ் பெரியநாயக்கன்பாளையம் துணை கண்காணிப்பாளர் மணி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மீது உதவி ஆய்வாளர் பொன்ராஜ் வழக்குப் பதிவு செய்தார்.
அதேபோல, மாவோயிஸ்ட் இயக்கமானது உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையின் பேரில் மத்திய அரசு மற்றும் மாநில அரசால் தடைசெய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த கைது நடவடிக்கை தேச விரோத நடவடிக்கையில் கீழ் வருவதால் போடப்பட்டுள்ள வழக்கின் படி, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி அவர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சக்திவேல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீபக்கை சந்தித்து வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்ட் தீபக் குற்றவாளிகள் வார்டுக்கு மாற்றம் :
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ரெட் ஷோனில் சிகிச்சை பெற்றுவந்த மாவோயிஸ்ட் தீபக் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட்டுகள் சுற்றி வருவதாக உளவுத்துறை மூலம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை எஸ்பி மூர்த்தி தலைமையில் மூன்று குழுவாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில், கோவை மாவட்டத்தில் உள்ள சேம்புகரைக்கு அருகே உள்ள மூலக்கண்கள் பகுதியில் மாவோயிஸ்ட் தீபக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
மேலும், தீபக்கை போலீசார் கைது செய்யும் பொழுது காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ரெட் ஷோனில் சிகிச்சை பெற்றுவந்த மாவோயிஸ்ட் தீபக் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அப்போது, அவர் மருத்துவமனை வளாகத்தில் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" என்று கோஷம் போட்டபடியே சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.