கோவை: தமிழக - கேரள எல்லையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தீபக்கை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
கோவை: தமிழக - கேரள எல்லையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தீபக்கை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட்டுகள் சுற்றி வருவதாக உளவுத்துறை மூலம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை எஸ்பி மூர்த்தி தலைமையில் மூன்று குழுவாக தேடுதல் வேட்டை நடத்தினர்

இந்த தேடுதல் வேட்டையில், கோவை மாவட்டத்தில் உள்ள சேம்புகரைக்கு அருகே உள்ள மூலக்கண்கள் பகுதியில் மாவோயிஸ்ட் தீபக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும், உடனிருந்த மாவோயிஸ்ட் மாதேஷும், பெண் மாவோயிஸ்ட்டு ஒருவரும் தப்பியோடியதையடுத்து இருவரையும் தற்போது தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கைதான தீபக் மீது தமிழகத்தில் எந்தவிதமான வழக்குகளும் இல்லாத காரணத்தினால் கேரளா மாநிலம் பாலக்காடு போலீசாரிடம் அவரை ஒப்படைக்க உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒருவாரமாக தீபக்கை கேரளா தண்டர்போல்டு போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியது. இந்நிலையில், தமிழக சிறப்பு அதிரடிப் படை போலீசார் மாவோயிஸ்ட் தீபக்கை கைது செய்தது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தீபக்கை போலீசார் கைது செய்யும் பொழுது காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.