கோவை : வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கியது. வெள்ள நீரில் பரிசலில் பயணித்து சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை : வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கியது. வெள்ள நீரில் பரிசலில் பயணித்து சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இயற்கையுடன் ஒரு நாள் இணைந்திருக்க விரும்புவோர் பலரும் இந்த சூழல் சுற்றுலாவுக்கு வனத்துறையிடம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குடும்பத்துடன் காத்திருக்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் பயிற்சி பெற்ற பழங்குடியின மக்களுடன் பாதுகாப்பான பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, அடர்ந்த காட்டில் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு மாதகாலமாகவே மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. பில்லூர் அணை கடந்த மாதத்தில் மூன்று முறை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும், அதிகப்படியான நீர் அணையில் தேங்கி இருப்பதனால், இந்த சூழல் சுற்றுலா நடைபெறும் இடமான பரளிக்காடு பகுதி முழுவதும் தண்ணீருக்கடியில் மூழ்கி வெள்ளக்காடாக மாறியது.
மேலும், சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதிகளில் தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் பரிசல்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த மூன்று வாரகாலமாக பரளிக்காடு சூழல் சுற்றுலாவை காரமடை வனத்துறையினர் ரத்து செய்து இருந்தனர்.

இந்த நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தின் வேகம் குறைந்ததால் இன்று முதல் மீண்டும் பரளிக்காடு சூழல் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். பருவமழைக்குப் பின் பசுமை திரும்பியுள்ள வனப்பகுதிகளை கண்டும் அணையில் தேங்கியுள்ள புது வெள்ள நீரில் பரிசலில் பயணித்து சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.