கோவை : கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் கைதான நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூன்று பேரின் தண்டணை மேல் முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு, மூன்று பேருக்கும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கோவை : கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் கைதான நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூன்று பேரின் தண்டணை மேல் முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு, மூன்று பேருக்கும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதா நாயர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை சரிதா நாயர், பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு அம்மாநில நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், இவர் கடந்த 2009ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐசிஎம்எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். அப்போது, காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், ஊட்டியை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன் மற்றும் ஜோயோவிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 6வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூவரையும் குற்றவாளியாக என கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போது, அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி, ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன், அபராத தொகை கட்ட தவறினால் 9 மாதம் கூடுதல் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
இதனிடையே சரிதா நாயரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் தான் ஏற்கனவே சிறையில் இருந்ததால் அந்த காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்து கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் தள்ளுபடி செய்தார்.
பின்னர், சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மேலாளர் ரவி ஆகிய மூன்று பேரும் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி நீதிபதியிடம் மனு அளித்ததை தொடர்ந்து, மூன்று பேரின் தண்டனை மேல் முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு, மூன்று பேருக்கும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது.