கோவை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்., 30 மற்றும் 31 ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.
கோவை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்., 30 மற்றும் 31 ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.

தமிழக அரசு மருத்துவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மத்திய அரசு மருத்துவர்ளுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை அறிவித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எங்களின் கோரிக்கைக்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்காததால் அடுத்தகட்ட போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது ;-

அரசு மருத்துவர்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் முயற்சி செய்யவில்லை. இதனால் எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்., 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
மேலும், தமிழகம் முழுவதும் 18,000 மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். அதேபோல கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். மேலும், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், அவசர சிகிச்சைகளுக்கான முக்கியத்துவத்துடன் இந்த போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.