கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே தனியார் பேருந்துகளுக்குள் நடந்த போட்டியில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினர்.
கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே தனியார் பேருந்துகளுக்குள் நடந்த போட்டியில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாகவே தனியார் பேருந்துகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தனியார் பேருந்துகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக் காட்டி, போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை இயக்கி வருகின்றனர்.
இதில் இவர்களுக்குள் நடக்கும் அதிவேக போட்டியில், இதுவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக, உரிய நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து காவலர்களும் மேற்கொள்ளாததால் தொடர்ச்சியாக இவர்களின் விதிமீறல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கண்ணன்(28) என்பவர் சிங்காநல்லூர் விஜிஎம் மருத்துவமனை அருகே TN 66H 2377 தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, உக்கடத்தில் இருந்து கண்ணம் பாளையத்திற்கு TN 39 BV 1189 என்ற எண் கொண்ட காடேஸ்வரி என்ற தனியார் பேருந்தும், TN 42E 2622 என்ற எண் கொண்ட ராஜலட்சுமி என்ற தனியார் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை இயக்கி வந்துள்ளனர்.
அதிவேகமாக வந்து கொண்டிருந்த பேருந்தானது, சிங்காநல்லூர் விஜிஎம் மருத்துவமனை அருகே மாறி மாறி சாலையை அடைத்தபடி சென்றனர். அப்போது, காடேஸ்வரி என்ற பெயர் கொண்ட பேருந்தானது, முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கண்ணன் என்ற இளைஞர் விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அதிவேகமாக, அலட்சியமாக தனியார் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுனரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தாக்கி, பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
தனியார் பேருந்துகளின் அடாவடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அந்த புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய சோமேஸ்வரன் காவல் நிலைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விபத்து ஏற்படும் என்று தெரிந்தே வாகனத்தை இயக்கும் பேருந்து ஓட்டுநர்கள், விபத்தை ஏற்படுத்தியும் முறையான தண்டனைகள் கிடைக்காததால் மீண்டும் அதே தவறை செய்து வருகின்றனர்.
ஆகவே இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் பேருந்து ஓட்டுநர்களை சிறைப்படுத்தினால் மட்டுமே பேருந்து ஓட்டுனர்களின் அட்டகாசம் குறையும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.