கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தண்டணை பெற்று நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அப்துல் ஹமீது என்கிற பிலால் ஹாஜியாரை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தண்டணை பெற்று நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அப்துல் ஹமீது என்கிற பிலால் ஹாஜியாரை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த வீரசிவா என்பவரின் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர் அப்துல்ஹமீது (எ) பிலால் ஹாஜியார். சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் 86 வயதான பிலால் ஹாஜியாரை கோவை மத்திய சிறையில் இருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பிலால் ஹாஜியாரை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை அவரை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிலால் ஹாஜியாரை விடுவிக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் ஏராளமான போலீசார் ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர், சடலங்களைப் போல படுத்துக் கொண்டு நூதன முறையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவினை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த மறுப்பதாகவும், உடனடியாக பிலால் ஹாஜியாரை விடுவிக்க வேண்டும் எனவும்,அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால், ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.