திருப்பூர் : திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த முன்னாள் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த முன்னாள் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு செல்ல முயற்சித்த போது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை விமான நிலைய கியூ பிரிவு அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார்(43) என்பவர் பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தி.மு.க. பிரமுகரான ராஜ்மோகன்குமார், திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களின் பனியன் ஆர்டர்களை பெறும் வகையில் பையிங் அலுவலகம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றையும் இவர் நடத்தி வருவதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த வாரம் சென்னையில் வைத்து ராஜ்மோகன் குமாரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று ராஜ்மோகன்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரின் பெண் உதவியாளரான திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவரின் வீட்டிலும் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு.வருகின்றனர். அதே போல், ராஜ்மோகன்குமாருடன் தொடர்பில் இருப்பவர்களின் விவரங்களையும் சேகரித்த கியூ பிரிவு போலீசார், அவர்களை ரகசிய கண்காணிப்பை தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மூலமாக, போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை கூண்டோடு கைது செய்ய கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.