கோவை : 3 மாத காலமாக ஊக்கத்தொகை வழங்காததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கோவை : 3 மாத காலமாக ஊக்கத்தொகை வழங்காததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், 2,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இப்படி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க குறைந்த அளவிலேயே மருத்துவர்கள் உள்ள நிலையில், சி.ஆர்.ஆர்.ஐ. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலைப் படிக்கும் மருத்துவர்களை வைத்து சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதனிடையே, இந்த பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை கடந்த 3 மாதமாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில், இன்று காலை பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கான ஊக்க தொகையை உடனடியாக வழங்கக் கோரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வரும் 280 பயிற்சி மருத்துவர்கள் இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனையில் நடைபெறும் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.