திருப்பூர் : திருப்பூரில் பாய்ந்து வரும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக 2-வது நாளாக பல பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் பாய்ந்து வரும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக 2-வது நாளாக பல பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூரில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் கோவையிலிருந்து நொய்யலுக்கு வெள்ள நீர் அதிக அளவில் வந்ததன் காரணமாக, மங்கலம் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பூர் ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் அதிக நீர் செல்வதன் காரணமாக, பாலம் பலவீனமாக இருப்பதால் அவ்வழியே வாகனம் செல்வதை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெவ்வேறு பாதைகளில் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கருவம்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள குடிசைகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், மழைக்காலங்களில் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.