நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், 70 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், 70 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 17 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14 பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிகளில் ஒன்றாக, சென்னை உயர்நீதி மன்றமும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இருப்பினும், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டத்தில் தற்போது 70 இடங்களில் குடிநீர் ஏடிஎம். மையங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. உதகை நகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சியில் 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியில் 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், 11 பேரூராட்சிப் பகுதிகளிலும், சுற்றுலாத் துறை சார்பில் தொட்டபெட்டா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தோட்டக்கலைத் துறை சார்பில் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தில் 70 குடிநீர் ஏடிஎம்., மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த குடிநீர் ஏடிஎம்., மையங்களில் உள்ள இயந்திரத்தில் 5 ரூபாய் காயின் செலுத்தினால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் பெற முடியும். இதன் மூலம், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு வெகுவாகக் குறையும் என்பதால் பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.