கோவை : பந்தய சாலை பகுதியில் வசித்து வரும் மில் அதிபரின் வீட்டில் இருந்த சுமார் 2 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள வைரம், தங்கம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பந்தய சாலை பகுதியில் வசித்து வரும் மில் அதிபரின் வீட்டில் இருந்த சுமார் 2 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள வைரம், தங்கம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பந்தய சாலை பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ் எத்திராஜ். இவர் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பெங்களூர் செல்வதால், வீட்டின் நம்பிக்கைக்குரிய பணியாளரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் ராய் என்பவரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் பெங்களுர் சென்று நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் பொருட்கள் அனைத்தும் கலைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பிரகாஷ் குமார் வீட்டில் இல்லாததை அறிந்து சந்தேகத்துடன் சென்று பாதுகாப்பு பெட்டகத்தை சோதனை செய்து பார்த்துள்ளார். அதில், தங்கம் மற்றும் வைர நகைகளும், 17 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை அறிந்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வீட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் ராய் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், திருடப்பட்ட பகுதியிலிருந்து சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 2 கோடியே 17 லட்சம் ரூபாய் இருக்கும் என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு காலமாக நம்பிக்கைக்குரியவராக இருந்த நபர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.