கோவை : கோவையில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று எச்சரிக்கை விடுத்த நிலையில், விதியை மீறிய ஓடிய தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
கோவை : கோவையில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று எச்சரிக்கை விடுத்த நிலையில், விதியை மீறிய ஓடிய தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
கோவை மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் பேருந்துகள், முறையாக பேருந்து நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை. அதேபோல, 4க்கும் மேற்பட்ட நடத்துநர்கள் பேருந்துகளின் படிகளில் தொங்கிக் கொண்டும், பெண்கள் அமரும் இடத்தில் அமர்ந்தும் பயணிகளுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். இவர்கள் பேருந்துகளில் வேண்டுமென்றே ஆபாசமான பாடல்களை அதிக சத்தத்தில் வைத்து பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றனர். மேலும், அதிவேகமாக பேருந்துகளை இயக்கியும், விதவிதமாக ஹாரன் சத்தத்தை எழுப்பியும் பேருந்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பொதுமக்கள் யாராவது தட்டி கேட்டால் பேருந்துக்குள் இருக்கும் குண்டர்களை கொண்டு மிரட்டுகின்றனர். ஒரு சில இடங்களில் தாக்குதலும் நடைபெறுகிறது. இந்த காரணங்களால் பொதுமக்கள் அனைவரும் தனியார் பேருந்துகளை கண்டால் நமக்கேன் வம்பு என ஒதுங்கி செல்கின்றனர்.
இதில், காவல்துறையினரும் தனியார் பேருந்துகளை கண்டுகொள்ளாததால் அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் செய்கிறது. காவல் துறையினரால் விதிமீறலில் ஈடுபடும் பேருந்துகள் மீது ஒரு சில வழக்குகள் பதியப்பட்டாலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கே தனியார் பேருந்துகளின் விதிமீறல்களை தடுத்து நிறுத்த முழு அதிகாரம் உள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
குறிப்பாக, பேருந்து நிறுத்தங்களில் முறையாக பேருந்துகளை நிறுத்தாமல் இயங்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உப்பிலிபாளையம் பகுதி மக்கள் பல முறை புகார் அளித்துள்ளனர். மேலும், சாலையை மறித்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளை பலமுறை உப்பிலிபாளையம் பகுதியில் சிறை பிடித்தும் வைத்துள்ளனர். ஆனால், அந்த சம்பவங்கள் ஓய்ந்தபாடில்லை. இதனால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மீது நம்பிக்கை இழந்த பொதுமக்கள், கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு பேருந்துகளின் அட்டகாசங்களை கொண்டு சென்றனர்.
இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கடந்த மாதம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விதியை மீறும் பேருந்துகள் மீது அபராதம் விதித்தனர். இதன் காரணமாக, சில நாட்கள் முறையாக பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துகள் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபட தொடங்கினர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை போக்குவரத்து காவல்துறையும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் உறுதிபடுத்தவும், அத்துடன் விதிமுறைகளுக்கு மாறாக இயக்கப்படும் பேருந்துகள் மீது 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி, கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தனது உத்தரவை செய்தி குறிப்பாக வெளியிட்டிருந்தார்.

ஆனால், மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே, வழக்கம் போல உப்பிலிபாளையம் பகுதிக்கு தனியார் பேருந்துகள் வராமல் திரும்பி சென்றது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், அதை மதிக்காமல் பேருந்தை இயக்கக் கூடாது என கோகுலம் என்ற பெயர் கொண்ட S2 பேருந்தை சிறைபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேருந்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்ததையடுத்து, பேருந்து இருந்து விடுவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்துகளின் விதிமீறலை தடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட முதல் நாளிலேயே, தனியார் பேருந்தின் விதிமீறல்கள் பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருப்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.