கோவை : வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 35 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 35 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டு காலமாகவே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்து வருகிறது. இந்த மோசடியாளர்களை விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்காகவே, மாநகர போலீசாரும், மாவட்ட போலீசாரும் தனித்தனிப் பிரிவுகளை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் உறுதிபடுத்தப்படும் மோசடியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மோசடி மன்னர்கள் பலர் தங்களிடம் இருக்கும் பண பலத்தினால், வெவ்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தலைமறைவாகவும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், 2017-ம் ஆண்டில் மோசடி செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரூ பகுதியைச் சேர்ந்தவர்கள் வானதி சுரேந்தர் (54) மற்றும் மகன் ராஜீவ் (34). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் தங்கராஜ் (50) உதவியுடன், வடவள்ளி அருகே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் ஏஜென்ஸியை நடத்தி வந்தனர். இந்த ஏஜென்சியின் கவர்ச்சி விளம்பரங்களைக் கண்டு பலர் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தினர். ஆனால், செலுத்திய பணத்திற்கான வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திருப்பித் தரப்படவில்லை.
இதனால், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் பினுமோல் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்டோர் அடுக்கடுக்காக புகார் கொடுத்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து நேற்று தனிப்படை போலீசார் பெங்களூரில் வைத்து சுரேந்தர் மற்றும் ராஜீவையும், சேலத்தில் வைத்து தங்கராஜையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இவர்கள் சுமார் ரூ. 35 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.