கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனைவியை பிரிந்த கோபத்தில் தனது பேத்தியை கல்லால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனைவியை பிரிந்த கோபத்தில் தனது பேத்தியை கல்லால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு கருப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (30) - முத்துமாலை தம்பதியினர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இப்படி இருக்க நேற்று காலை முத்துமாலை தனது வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்த போது, அங்கு வந்த குமாரின் அப்பா செல்வராஜ், குழந்தை தர்ஷினியை வலுக்கட்டாயமாக பிடிங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து, குமார் மற்றும் அவரது உறவினர்கள் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு என பல்வேறு பகுதியிலும் அவர்களை தேடினர். ஆனால், எவ்வளவு தேடியும் கிடைக்காததால், சிறுமியின் தந்தை குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை செல்போன் டவர் மூலம் கிணத்துக்கடவு ரயில்நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குழந்தையைக் கல்லால் அடித்துக் கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதில், அதிர்ச்சி அடைந்த போலீசார், செல்வராஜை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் பெற்றோர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
மேலும், போலீசார் செல்வராஜிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் தனது இரண்டாவது மனைவி சக்திகனி தன்னை விட்டு பிரிந்ததற்கு காரணம், தனது மகன் குமாரும், அவரது மனைவியும் தான் என்ற காரணத்தின் அடிப்படையில் பழிவாங்கும் நோக்கத்தில், தனது பேத்தியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. தாத்தாவே தனது 10 மாத பேத்தியை செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.