கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை, சுகாதாரத் துறை தடுப்பூசிகள் பிரிவு இணை இயக்குநர் அடங்கிய மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை, சுகாதாரத் துறை தடுப்பூசிகள் பிரிவு இணை இயக்குநர் அடங்கிய மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் அண்மையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 11 பேர் தொண்டை அடைப்பான் நோய் பாதிப்புக்குள்ளாகி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொண்டை அடைப்பான் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, சுகாதாரத் துறை தடுப்பூசிகள் பிரிவு இணை இயக்குநர் சி. குமார் உள்பட 3 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் பொது சுகாதாரத்துறை நோய் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் சேகர் கூறியதாவது :- கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவையை சேர்ந்த ஒருவரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது, என்ன மருந்துகள் வழங்கப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. அனைவருக்கும் டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்டு ஆரோக்கியமாக உள்ளனர். 12 நாள் வரை தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டியுள்ளதால், உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது கேரளா, கர்நாடக பகுதிகளில் பரவலாகக் காணப்படுவதால், அங்கிருந்து இங்கு பரவியிருக்க வாய்ப்புள்ளது. மலைப்பகுதிகள், ஊரகப் பகுதிகள் மற்றும் நகரங்களில் என 3 பிரிவுகளாக குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு 3 மாதம், 1 1/2 வயது, 10 வயது மற்றும் 15 வயதுகளில் தடுப்பூசிகள் கட்டாயம் போட வேண்டும். இந்த தடுப்பூசிகளை முறையாக போட்டுக்கொள்ளாததாலும் இந்நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும். மலைவாழ் மக்களிடத்தில் அதிகளவில் ஏற்படுவதற்கும் இதுவே காரணமாகும். கோவை, ஈரோடு மற்றும் மதுரை மாவட்டத்தில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதால், நோய் பரவுதலை தீவிரமாக கண்காணிக்க அந்தந்த துணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நோய்க்கான தடுப்பூசிகள், மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 லட்சம் டி.பி.டி. தடுப்பூசிகளும், 15 லட்சம் டி.டி. தடுப்பூசிகளும், 10 ஆயிரம் டோஸஸ் மருந்துகளும், 15 லட்சம் மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே. தடுப்பூசி போடாத அனைத்துக் குழந்தைகளுக்கும் வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதிக்குள் போடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதும் மலைவாழ் குடியிருப்புகள், கிராமப்புறப் பகுதிகளில் தடுப்பூசிகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள மக்கள் அஞ்சுகின்றனர். உரிய பருவத்தில் உரிய தடுப்பூசி போடாததே பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே. குழந்தைகளுக்கு அனைத்துத் தடுப்பூசிகளையும் மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும், என்றார்.
இந்த ஆய்வின் போது, மாநில நோய்த்தொற்றில் பிரிவு அதிகாரி கே. துரைராஜ், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மை மருத்துவர் எஸ். ரகுநந்தன், கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.ஜி. பானுமதி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பூமா, மருத்துவர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.