கோவை : கோவை - பொள்ளாச்சி சாலையில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான நிலையில், அந்த சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை : கோவை - பொள்ளாச்சி சாலையில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான நிலையில், அந்த சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை - பொள்ளாச்சி சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இந்த காரணங்களால் பொள்ளாச்சி சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் கனரக வாகனங்களை ஓட்டி வருபவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தேனீர் கொடுக்கப்பட்டு, புத்துணர்ச்சியான வார்த்தைகள் மூலம் மீண்டும் அனுப்பப்பட்டு வந்தனர். ஆனால், இந்த செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. இதையடுத்து, மீண்டும் இரவு நேரங்களில் நடைபெறும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மீண்டும் ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. இதில், கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று, கோவை வழியாக சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலம் ராசிபுரத்தை சேர்ந்த சங்கர் (35) என்பவர் ஓட்டி வந்தார். சேலத்தை சேர்ந்த ராஜலிங்கம் (28) என்பவர் கிளீனராக இருந்தார். அவர்களது டேங்கர் லாரி ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே வந்த போது, சேலத்தில் இருந்து கொச்சி செல்வதற்காக டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில், டேங்கர் லாரியின் ஓட்டுநர் சங்கர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கிளீனர் ராஜலிங்கம் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த செட்டிபாளையம் போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணி துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைவாக வந்தவர்கள், லாரியில் நசுங்கி உள்ளே சிக்கிக் கிடந்த சங்கரின் உடலை மீட்டனர். மேலும், படுகாயமடைந்த கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.