கோவை : தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வரும் நிலையில், நீர் சேமிப்பில் மாணவர்களின் பங்கு மகத்தானது என சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயா சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வரும் நிலையில், நீர் சேமிப்பில் மாணவர்களின் பங்கு மகத்தானது என சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயா சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயா சிவசேனாபதி கலந்து கொண்டார். அப்போது, தண்ணீரை சேமிக்கும் பணியினை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மழை நீர் சேமிப்பே தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க ஒரே வழியாகும் எனக் கூறிய அவர், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அவர் பேசுகையில், "எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தண்ணீரை சேமிப்பதன் அவசியமே வறட்சியை தவிர்ப்பதாகும். தற்போது, குடிநீர், நீர்ப்பாசனம், தொழிற்சாலைகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு குறைந்த அளவிலான தண்ணீர் இருப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் கொள்கையை மாநில அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், தமிழக மக்களிடம் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அரசியல் கட்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதோடு, விவசாயிகள் பயனடையும் வகையில், விவசாய நிலங்களை ஒட்டி செயற்கை குட்டைகள் உருவாக்க வேண்டும்," எனக் கூறினார்.

தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு கார்த்திகேயா சிவசேனாபதி பதில்களை அளித்தார்.