கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நீதிமன்றத்திற்குள் சென்று கொண்டிருந்த தாயும், மகனையும் போலீசார் வழிமறித்து கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: போத்தனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் நீதிமன்றம் முன்பு வைத்து கைது செய்ய முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை கோணவாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தான முத்து. இவர் மீது ஏற்கனவே பல கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போத்தனூர் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், போலீசார் கைரேகை மூலம் சந்தானம் முத்துதான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார் என உறுதிப்படுத்தி தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றொரு குற்றவாளியின் உதவியுடன் சந்தான முத்துவை நீதிமன்றம் அருகே வரவழைத்தனர்.

இந்த நிலையில், நீதிமன்றம் அருகே தனது தாயுடன் வந்த சந்தானம் முத்துவை மறைந்திருந்த போலீசார் திடீரென சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டனர். இதையடுத்து, சந்தானம் முத்துவின் தாயார் அவரை கைது செய்ய கூடாது என சாலையில் அமர்ந்தார். பின்னர், போலீசார் இருவரையும் வாகனத்தில் ஏறும்படி இழுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் போலீசாருடன் வர மறுத்து கதறி அழுதனர். இதையடுத்து, அருகே இருந்த வழக்கறிஞர்கள் பெண் நபரை இழுக்கக் கூடாது எனவும், நீதிமன்றத்திற்குள் வருபவர்களை இப்படி தடுத்து நிறுத்தி கைது செய்யக்கூடாது எனவும் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இவர்கள் அங்கிருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 7-க்கு தப்பிச் சென்றனர். கோவையில் நீதிமன்றம் முன்பு போலீசார் தாய் மகனை இழுத்து கைது செய்ய முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.