கோவை : கோவையில் நடைபெற்ற புதிய கல்வி கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவையில் நடைபெற்ற புதிய கல்வி கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் கோவை - அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய 9 மாவட்டங்களைச் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி வளர்ச்சிக்கு துணை புரியும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், கல்வி சார்ந்த ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், முறையாக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் 9 மாவட்டங்களைச் சார்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை வைத்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி இராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கூட்டம் நடைபெற்ற பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, அவர் பேசுகையில், "இந்த கருத்து கேட்புக் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை. எனவே, அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் தகவல்கள் தெரிவித்து, இந்தக் கூட்டத்தை முழுமையாக மக்கள் மத்தியில் சென்றடைய செய்து, 9 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களிடமும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரிடமும் முறையாக கருத்து கேட்க வேண்டும். அவ்வாறு கருத்துக்களைக் கேட்ட பின்புதான் இது குறித்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். எனவே, இந்தக் கூட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். ஏன் யாருக்கும் தகவல்களை அளிக்கவில்லை. எனவே, இந்தக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்," எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் ராமகிருஷ்ணனை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகத்தினரும், போலீசாரும் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து ராமகிருஷ்ணன் தலைமையிலான த.பெ.தி.க.வினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், தற்போது நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மீண்டும் இவ்வாறு இதுபோன்ற கூட்டங்கள் யாருக்கும் தெரியாமல் நடைபெற்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக ராமகிருஷ்ணன் தெரிவித்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஈஸ்வரன் மற்றும் ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வருகை தந்து அங்குள்ள அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.