திருப்பூர் : திருப்பூர் அருகே இறுதிச்சடங்கு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் : திருப்பூர் அருகே இறுதிச்சடங்கு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ்(70), கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி ராசாத்தி காலமாகிவிட்டார். இவருக்கு செல்வி(42) என்கிற மகளும், கோபாலகிருஷ்ணன் (39) (திருமணம் ஆகாதவர்) என்கிற மகனும், சாந்தி என்கிற இளைய மகளும் உள்ளனர். மேலும், செல்விக்கு சிவக்குமார் என்பவருடன் திருமணம் நடந்து ரகுநாதன் (22) என்கிற மகன் இருந்தார். தந்தையின்றி வாழ்ந்து வந்த ரகுநாதன் கடந்தாண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், குடும்பமே மனமுடைந்து காணப்பட்டது.
இதனிடையே, இன்று காலை தனது தங்கை சாந்தியைக் காண இடுவாய்க்கு கோபாலகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது, சாந்தியிடம் இன்று செலவுக்கு தேவைப்படும் என கூறி 30,000 ரூபாயை கோபாலகிருஷ்ணன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீடு திரும்பிய கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது கோபாலகிருஷ்ணனின் உடல் வீட்டினுள் உள்ள விட்டத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தது. மேலும், துரைராஜின் உடல் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் படுக்கையில் கிடந்தது. மேலும், விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வியை மீட்ட அக்கம்பக்கத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.