கோவை : ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை : ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்களில் ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி இனமும் ஒன்று. இந்த பட்டாம்பூச்சிகள், கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் மஞ்சள் மற்றும் அடர்த்தியான காப்பி கலரில் இருக்கும்.

‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

"பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்கியதன் மூலம் அவற்றிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ் கலாச்சாரத்தை குறிக்கும் விதமாக பெயரைக் கொண்டுள்ள தமிழ் மறவன் பட்டாம்பூச்சி மிகவும் அழகாக இருக்கும். வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் இவை பட்டியலிடப்படவில்லை. இதனை மாநில பட்டாம்பூச்சியாக அங்கீகரித்தது சிறப்பான நடவடிக்கையாகும்," என்றார் கோவை பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பி. மோகன் பிரசாத்.

தமிழகத்தின் சின்னங்களாக வரையாடு (விலங்கு), மரகதப்புறா (பறவை), காந்தள் (மலர்), பனை (மரம்), பலா (பழம்) ஆகியவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அந்த வரிசையில் மாநில பட்டாம்பூச்சியாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல, கேரளா, கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைத் தொடர்ந்து, பட்டாம்பூச்சிக்கு அந்தஸ்து வழங்கிய 5-வது மாநிலமாக தமிழகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.