திருப்பூர் : ரூ. 5 லட்சம் ஏமாற்றியதாக திருப்பூரில் பனியன் நிறுவனம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : ரூ. 5 லட்சம் ஏமாற்றியதாக திருப்பூரில் பனியன் நிறுவனம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காங்கேயம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மனைவி ஜானகி. இவர், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் வசிக்கும் நடராஜ் என்பவரிடம் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஜானகியின் மகனுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பி ஜானகி தான் குடியிருந்த வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து ரூ. 5 லட்சம் பணத்தை நடராஜிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, 4 வருடங்களாக இன்று, நாளை என்று நடராஜ் சாக்கு போக்கு சொல்லி வந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த ஜானகி இன்று நடராஜின் பனியன் நிறுவனம் முன் உடலில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட போலீசார் ஜானகியின் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து, போலீசார் இருதரப்பினரையும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தீக்குளிக்க முயன்ற ஜானகி கூறுகையில், “எனது மகன் பிரவீன் குமாருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி எனது இடத்தின் பத்திரத்தை கொடுத்தேன். அதை பரமேஸ்வரன் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்த நடராஜ், எனது மகனுக்கு வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் தரவில்லை. ஆனால், பத்திரத்தை அடகு பெற்ற பரமேஸ்வரன் வழக்கு போட்டுள்ளார். இதையறிந்த எனது மகன் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார். ஆனாலும் பணம் தராமல் ஏமாற்றுகிறார்,” என்றார்.

இதுகுறித்து நடராஜிடம் கேட்டபோது, தான் எந்த பணமும் தர வேண்டியதில்லை. 2 லட்சமாக இரண்டு முறையும், ஒரு லட்சம் என 5 லட்சம் கொடுத்து முடித்தும், மீண்டும் பணம் கேட்டு மிரட்டுகிறார், எனக் கூறினார். மேலும், பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களை போலீசாரிடம் காட்டியதாக அவர் தெரிவித்தார்.