திருப்பூர் : திருப்பூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பத்தை மாற்றி வைக்கும் போது, அடுத்தடுத்து மின் கம்பங்கள் முறிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பத்தை மாற்றி வைக்கும் போது, அடுத்தடுத்து மின் கம்பங்கள் முறிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மின் கம்பத்தை மாற்றியமைக்க ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக முறிந்து விழுந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு (24) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல, இசக்கிமுத்து (27) என்பவர் தலையில் பலத்த காயத்துடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு பிழைப்பதற்காக வந்த இடத்தில் நடந்த இந்த துயர சம்பவம் உடன் வேலை செய்பவர்கள் மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.