கோவை : கோவை ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கியர் பாக்ஸ் திடீரென உடைந்து நடுவழியில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை : கோவை ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கியர் பாக்ஸ் திடீரென உடைந்து நடுவழியில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி வாகனங்கள் நடுவழியில் பழுதாகி நிற்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். அதேபோல, கோவை மாவட்டத்தை பொறுத்தவரைப் பேருந்துகளின் படிகள் உடைந்து தொங்கிய நிலையில் இருப்பதும், கதவுகள் உடைந்து கிடப்பதும், முறையான பராமரிப்பு இல்லாததால் கரும்புகையை கிளப்பியபடி பேருந்துகள் சாலையில் செல்வதுமாக உள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கோவை கோட்டத்துக்கு உட்பட்ட TN 38 N 2225 என்ற எண் கொண்ட காந்திபுரம், உக்கடம் வழியாக ஈச்சனாரி செல்லும் பேருந்தானது, கோவை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்தின் கியர்பாக்ஸ் உடைந்தது. இதனால், பேருந்து சாலையில் நடுவழியில் நின்றது. மேலும், பேருந்தை சாலையின் ஓரத்தில் நகர்த்த முடியாதபடி நின்றதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், இந்த பரபரப்பான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, அரசு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல முடியாதபடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ்களை உரிய நேரத்திற்கு ஓட்டிச் செல்ல முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து, தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பினர். இந்த நிலையில், போக்குவரத்து கழகத்தின் பழுது பார்ப்பவர் தற்போது பேருந்தை சரி செய்து ஓரத்தில் நிறுத்தியுள்ளார். தற்போது, பேருந்துகள் வழக்கம் போல ரயில்நிலைய சாலை வழியாக செல்கிறது.