நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தை பரிசு பெட்டகம் சின்னம் உறுதி செய்யும் என்பதும் பொய்த்துள்ளது. பல இடங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச்லைட் சின்னம் கணிசமான வாக்குகளோடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 11 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள மநீமவின் டார்ச்லைட் ஒளி வீசிய பகுதிகளில், கோயம்புத்தூர் தொகுதி முதலிடத்தில் உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தை பரிசு பெட்டகம் சின்னம் உறுதி செய்யும் என்பதும் பொய்த்துள்ளது. பல இடங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச்லைட் சின்னம் கணிசமான வாக்குகளோடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 11 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள மநீமவின் டார்ச்லைட் ஒளி வீசிய பகுதிகளில், கோயம்புத்தூர் தொகுதி முதலிடத்தில் உள்ளது.

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட தொழில் நெருக்கடி மற்றும் பாஜக உட்கட்சி பூசல் உள்ளிட்ட காரணிகளால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்தும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார், சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன். கோவை தொகுதியில் மூன்றாவது வெற்றியை சிபிஎம் கட்சியும், அதில் இரண்டாவது வெற்றியை பி.ஆர்.நடராஜனும் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் இந்தியாவில் பாஜகவை நேரடியாக கம்யூனிஸ்ட்கள் வீழ்த்திய ஒரே தொகுதி, கோயம்புத்தூர் மக்களவை தொகுதி தான்.
முதலிரண்டு இடத்தையும் சிபிஎம், பாஜக பிடிக்க மூன்றாவது இடத்தை அமமுக பிடிக்குமெனவும், அதிமுக கூட்டணி வெற்றியை பாதிக்கும் எனவும் கணிக்கப்பட்டது. அதனை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளன. மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்தும் மேற்பட்ட வாக்குகளோடு மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் நான்காம் இடத்தை பிடித்தார். ஆனால் வெறும் 38 ஆயிரம் வாக்குகளோடு அமமுக வேட்பாளர் அப்பாதுரை ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தபால் வாக்குகளிலும் மநீம வேட்பாளர் மகேந்திரனுக்கே மூன்றாம் இடம் கிடைத்தது.

மூன்றாம் இடம் எப்படி சாத்தியமானது?

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய 18 மாதங்களில், தனது முதல் தேர்தலை சந்தித்தது. டார்ச்லைட் சின்னத்தில் இந்திய குடியரசு கட்சி மற்றும் வளரும் தமிழகம் ஆகிய சிறிய கட்சிகளோடு சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை கமல்ஹாசன் கோவையில் தான் நடத்தினார். கோவை தொகுதியில் கமல்ஹாசனே போட்டியிட இருப்பதாகவும் பேச்சு எழுந்தது. இதற்கு ஒரளவு ஆதரவு தளமும், தொழிலதிபர்கள், இளைஞர்கள், நகர்புற வாக்குகள், புதிய வாக்காளர்கள் உள்ளிட்டோரின் வாக்குவங்கியும் இருந்ததே காரணம். இருப்பினும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், மநீம துணை தலைவருமான டாக்டர் மகேந்திரன் போட்டியிட்டார். நடிகர் கமல்ஹாசன் கோவைக்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவைக்கான செயல் திட்டத்தை வெளியிட்டு எவ்வளவு காலத்தில் செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது, சமூக வலைதளங்களில் மேற்கொண்ட பரப்புரைகள் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.

கமல்ஹாசன் என்ற நட்சத்திர நடிகர் அக்கட்சிக்கு பெரும் பலமாக இருந்தார். இது கட்சியையும், சின்னத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க எளிதாக முடிந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றத்திற்காக வாக்களிக்கும் மக்கள் இருப்பார்கள். அதிமுக தொண்டர்களில் ஒரு பகுதியையும், பணபலத்தையும் நம்பி களமிறங்கிய அமமுக காட்டிலும், மாற்றத்திற்கான கட்சியாக மநீம இருந்துள்ளது. டிடிவி தினகரனுக்கு கூடிய கூட்டங்கள், வாக்குகளாக மாறவில்லை. கோவையில் அறிமுகம் மற்றும் செல்வாக்கு இல்லாத வேட்பாளரான அப்பாதுரைக்கு வாய்ப்பளித்ததும் அமமுக, ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட முக்கிய காரணம்.

கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்பகுதிகளில் மநீமவிற்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. படித்த, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் கணிசமாக டார்ச்லைட் சின்னத்தில் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாற்றத்திற்காக தாமரையில் விழுந்த வாக்குகள், இம்முறை டார்ச்லைட்டில் விழுந்துள்ளன. பெரிதாக பணம் செலவழிப்பு, பரப்புரைகள் எதுவும் இன்றி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுகவிற்கு ஆட்பலமும் மநீமவிற்கு இல்லை. பல இடங்களில் பூத் ஏஜெண்ட்கள் கூட இல்லாத நிலையிலும் மூன்றாம் இடத்தை மநீம சாத்தியப்படுத்தியுள்ளது.

ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தான் மநீம பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவையில் பாஜக வாக்குகளை அதிகளவு மநீம சிதறடித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க விரும்பாதோரின் வாக்குகளை மநீம ஒரளவு பெற்றுள்ளது. அவை பாஜகவிற்கு செல்ல வேண்டிய வாக்குகள் என்றாலும், அவை முழுமையாக சென்றிருந்தாலும் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
முதல் தேர்தலில் நல்ல துவக்கத்தை மநீம பெற்றுள்ளது. மாற்றத்திற்காக விழுந்த வாக்குகளை மநீம தக்க வைக்குமா என்ற கேள்விக்கு, அடுத்தடுத்த தேர்தல்கள் பதிலளிக்க கூடும்.