கோவை : போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை : போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி பேருந்துகள் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 2012 விதிமுறையின்படி உள்ளதா என கோவை காவல் பயிற்சி மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், கோவை மாநகரரில் உள்ள 221 பள்ளிகளைச் சேர்ந்த 1,172 பள்ளி வாகனங்கள் தரக்கட்டுப்பாடு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று தொடங்கும் இந்த ஆய்வு ஜூன் முதல் வாரத்திற்குள் முடிவு பெறும் என வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்து உள்ளது. பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசியதாவது :- பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டை அடுத்து, அரசு பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளின் வேகம் குறித்து தணிக்கை செய்யப்படும். பள்ளி வாகனங்களில் பிரேக், என்ஜின் ஆகியவற்றின் தரம், வாகன படிக்கட்டுகளின் உயரம், அவசரகால வழி முறையாக இயங்குகின்றதா என்பன உட்பட பல ஆய்வுகளுக்குப் பின்னர் பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பள்ளிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பள்ளி வாகனங்களுக்கென விதிக்கப்பட்ட பேருந்தின் வண்ணம் உட்பட்ட அனைத்து விதிகளும் பொருந்தும். விதிகளை மீறி பள்ளி வாகனங்கள் இயக்கும் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

முன்னதாக, பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, "கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்துகளை உபயோகித்து வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். இது பள்ளி நிர்வாகம் மற்றும் ஓட்டுனர்களுக்கு பொருந்தும்," என்றார்.

தொடர்ந்து, விழிப்புணர்வு கையேட்டை ஓட்டுனர்களுக்கு வழங்கிய அவர், ஆய்வு செய்யப்பட்ட வாகனங்களின் முகப்பில் ஆய்வுக்கு உட்பட்டது என்ற வில்லையை ஒட்டினார். இதனைத் தொடர்ந்து, மற்ற வாகனங்களை போக்குவரத்துத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரவேல், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜூ, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பால்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் கீதா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
