கோவை : கோவையில் இளைஞர் ஒருவரை அவரது பெற்றோர்கள் கண்முன்னே நள்ளிரவில் மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் இளைஞர் ஒருவரை அவரது பெற்றோர்கள் கண்முன்னே நள்ளிரவில் மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாகவே கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை சட்டவிரோதமாக பயன்படுத்தும் கும்பல்கள் கோஷ்டி மோதலில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மாநகரின் முக்கிய பகுதியான அவிநாசி சாலை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் இருவரை பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சரமாரியாக அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் தொடர் சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக விரோத கும்பல் ஒன்று மீண்டும் நேற்று கோவை மாநகரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஜான்பிரிட்டோ (28) என்பவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில், அங்குள்ள சில நண்பர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு செய்தவர்கள் ஜான்பிரிட்டோவை அவரது வீட்டிற்கு பின் தொடர்ந்து பெற்றோருடனும் தகராறு செய்து, ஜான்பிரிட்டோவை சரமாரியாக கத்தியால் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த மற்றொரு நண்பருக்கு கத்தியால் குத்தப்பட்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர், தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் ஜான் பிரிட்டோ என்பவர் மீது கொலை வழக்கு உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, இவர் கஞ்சா வியாபாரம் செய்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.