கோவை : மதத்தையும், சாதியையும் பிரச்சாரத்தில் கொண்டு வந்து பேசியவிதத்தை கமல்ஹாசனிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை : மதத்தையும், சாதியையும் பிரச்சாரத்தில் கொண்டு வந்து பேசியவிதத்தை கமல்ஹாசனிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது. இறுதி நாளான இன்று சூலூர் தொகுதிக்குட்பட்ட கனியூர் ஊராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அ.தி.மு.க.வினர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது :- சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறும். மேலும், ஸ்டாலின் ஒரு நம்பிக்கையில் இருக்கிறார். ஹிட்லர் காலத்தில் இருந்த கோயபல்ஸ் என்ற அமைச்சர் பாணியில் ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால், அதில் ஏதாவது உண்மை இருக்குமோ என மக்கள் எண்ணுவார்கள் என எண்ணி ஸ்டாலின் ஆட்சி மாற்றம் என்ற பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார். ஆனால், அ.தி.மு.க. மிகப்பெரிய இமாலய வெற்றியை எட்ட போகிறது. எந்த வைக்கோலை பிடித்து நடக்க முடியும் என்று ஸ்டாலின் நினைத்திருக்கும் சூழலில், எந்த துரும்பும் அவர் கையில் சிக்காது. 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அம்மா இருந்த காலத்தில் இருந்ததைப் போன்று பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிரவாதம் குறித்து பேசிய விதம் மற்றும் அதனை தொட்ட இடம் தவறானது மதத்தையும், சாதியையும் பிரச்சாரத்தில் கொண்டு வந்து பேசிய விதம், கமலிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படி பேசிவிட்டு தற்போது பிரச்சாரம் செய்யும் வாய்ப்பையும் இழந்து நிற்கிறார் நடிகர் கமலஹாசன். இந்த சூழலில் தான் சொன்னது தவறு என்று கூறி வருத்தம் தெரிவித்து மீண்டும் முன்னோக்கிச் செல்வது தான் அவருக்கு ஒரே வழி. மக்கள் மத்தியில் இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பேரை மீட்டு எடுக்க இதனை செய்ய வேண்டும். பொதுமக்கள் மத்தியில் இது காய்ந்திருக்கக் கூடிய புண்ணை சீண்டிப் பார்க்கக் கூடிய ஒரு விஷயம். தேவை இல்லாத விஷயத்தை கமல் கையில் எடுத்திருக்கிறார். சூலூர் தொகுதியில் எந்த பதட்டமும் இல்லை. இல்லாத ஒரு பதட்டத்தை உருவாக்க கமலஹாசன் முயற்சி எடுக்கிறார்.

சூலூர் அ.தி.மு.க.வின் கோட்டை. இந்த எஃகு கோட்டையில் யாரும் ஓட்டை போட முடியாது என்பதால் எதிர்க்கட்சியினரே அமைதியான முறையில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில், எந்த பகுதியிலும் எந்த ஒரு மோதல் சம்பவமும் நடைபெறவில்லை. ஏதாவது ஒரு இடத்தில் ஏதோ ஒரு கொந்தளிப்பு உருவாகி விடாதா என்ற நப்பாசையில் கமலஹாசன் பேசி வருகிறார், என குற்றம்சாட்டினார்.