நீலகிரி : உதகையில் நடக்கும் 123-வது மலர் கண்காட்சி விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார்.
நீலகிரி : உதகையில் நடக்கும் 123-வது மலர் கண்காட்சி விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார்.

123-வது உதகை மலர்க்கண்காட்சி துவக்க விழா ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் தமிழக தோட்டக்கலை துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது :- மலர்களால் மணம் வீசும் உதகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது உதகை இந்தியாவிலே அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக உள்ளது. மலைகள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை புல்வெளிகள், மலர்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. உலகிலேயே முதல் சுற்றுச்சூழல் மண்டலமாக நீலகிரி உள்ளது. உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா, பைக்காரா ஏரி, உதகை ஏரி, டால்பின் காட்சி முனை, அவலாஞ்சி, மலை ரயில் ஆகிய சுற்றுலா தளங்கள் பயணிகளை கவர்ந்து வருகிறது. அதே போல், உதகையிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் பழைமையானது. இங்கு 250 அரியவகை ஆர்ன்பில், ஃபிளைகேச்சர் உட்பட பறவைகள் உள்ளது.

உதகை மலர்க்கண்காட்சி உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. உதகையில் முதன்முறையாக 1896 ஆம் ஆண்டு மலர் காட்சி நடத்தப்பட்டது. இதையடுத்து, 100 ஆவது மலர்கண்காட்சியை ஒட்டி 10 ஏக்கரில் ரோஜ பூங்கா அமைக்கப்பட்டது. இது உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய அளவில் 19% கொய்மலர்கள் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற கட்டிடம், தூலிப் மலர்கள், மலர்நீர்வீழ்ச்சி ஆகியவை பாராட்டும்படி இருந்தது. கடந்த 20 வருடங்களாக விவசாயத் துறையில் பல வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் பொருட்கள், பிளாஸ்டிக் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதிகளவு கார்பன் வாயுவால் வானத்தில் ஒசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு இயற்கை மாசு அடைந்துள்ளது. மக்கும் பொருட்களை மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தி நமது வசிப்பிடத்தை மேம்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி கூறியது போல், இயற்கை ஒவ்வொருவனின் தேவைக்காக மட்டுமே உள்ளது. மக்களின் பேராசைக்காக இயற்கை இல்லை. இதனால், அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். எளிமையான வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
இன்று தொடங்கிய உதகை மலர்க்கண்காட்சி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, லில்லி மற்றும் கார்னேசன் மலர்களால் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. அதே போல், இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக ஊட்டி தோட்டக்கலை துறை சார்பில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வெள்ளை சிவப்பு கார்னேசன் மலர்களால் நாடாளுமன்ற கட்டிடம் பிரமிக்க வைக்கும் வகையில் அமைக்கபட்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் முண்டி அடித்துக் கொண்டு செல்ஃபி மற்றும் குடும்பத்தோடு போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். மலர் காட்சி மேடையில் ஆலந்து மற்றும் ஜப்பான் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தூலிப் மற்றும் ஆர்கிட் மலர்கள் மனதை கவரும் வகையில் இருந்தது. அந்தூரியம், லில்லி, ஆஸ்டர், ஆர்டிசோக், ஆர்னமென்டல்லில்லியம், பேன்சி உள்ளிட்ட மலர்களும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. வெள்ளை மற்றும் மஞ்சள் பூசனி, தர்பூசனி ஆகிய காய்கறிகளால் குடைந்து உருவாக்கப்பட்டிருந்த புலி, சேவல், கொக்கு போன்ற உருவங்கள் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுத்தது .
தோட்டக்கலைத் துறை சார்பில் 5 ஆயிரம் லில்லி, பேபி டால் மற்றும் மெரி கோல்டு மலர்களால் உருவாக்க பட்டிருந்த மலர்நீர்வீழ்ச்சி கண்ணை கவரும் வகையில் இருந்தது. ராஜ்பவன், வெலிங்டன் ராணுவ மையம், ஆதிவாசி சங்கம், மெக்கன்ஸ் கட்டிடவியல் கல்லூரி மற்றும் தனியார் சார்பில் 10க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.