மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை காரணமாக வென்டிலேட்டர் இயங்காததால் 5 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனையின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை காரணமாக வென்டிலேட்டர் இயங்காததால் 5 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனையின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. பின்னர், இரண்டு மணி நேரத்திற்கு பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது. இந்த நிலையில், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வெண்டிலேட்டர், மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. இதனால், சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (55), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் (52) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் பலியாகினர். தொடர்ந்து, மேலும் இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கதறி அழுதபடி மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் உயிரிழப்பிற்கு காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மதுரை அரசு மருத்துவமனையின் தலைவர்,
“ஜெனரேட்டர் பழுதானது உண்மையே. எனினும், வென்டிலேட்டரால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.