நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவின் நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவின் நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதற்கு பார்க்கிங் கட்டணமாக காருக்கு ரூ. 3, வேனுக்கு ரூ. 5, பேருந்திற்கு ரூ. 10 என நகராட்சி கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இங்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள தனியார், குறைந்தபட்சமாக ரூ. 70 முதல் அதிகபட்சமாக ரூ. 150 வரை முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து இங்குள்ள தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த உமா சங்கர் கூறும் போது :- குன்னூர் சிம்ஸ் பார்க்கிற்கு வாகனத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்களுக்கு ''பார்க்கிங் கட்டணம் அதிகபட்சமாக ரூ. 150 வசூலிப்பதுடன் தனியாக ரூ. 100 போலீசாருக்கு கொடுக்க வேண்டுமெனக் கூறி மொத்தம் ரூ. 250 வரை வசூலிப்பதாகக் கூறுகின்றனர். இது குறித்து காவல்துறைக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான சாலையின் ஓரத்தில் பாதுகாப்பற்று நிற்கும் வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது எந்தவகையில் நியாயம்.
இது போன்ற கட்டணக் கொள்ளையால் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், சிம்ஸ்பூங்காவிற்கு வருவதையே பல சுற்றுலா வாகனங்கள் தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள 100-க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், என்றார்.

இது குறித்து நகராட்சியின் வருவாய் அதிகாரி நாராயணனிடம் கேட்ட போது :- சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் மீது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் வருவதால். அவரிடம் இருந்த கூடுதல் கட்டணம் போட்டு அச்சடித்து வைத்துள்ள டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் வரை அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தொடர்ந்து விதிமீறலில் அவர் ஈடுபட்டால் குத்தகை ரத்து செய்யப்படும். இது குறித்து சிம்ஸ்பார்க் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளோம். சுற்றுலாப் பயணிகள் பாதிக்காதவாறு இங்குள்ள காவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர், என அவர் தெரிவித்தார்.
இந்த கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த சுற்றுலாப் பயணிகள் அறியும் வகையில், பெரிய அளவிலான கட்டண விபர போர்டுகளை வைக்க நடவடிக்கை எடுப்பதோடு, புகார் குறித்து தொலைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டும் என்று இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.