கோவை : வருமான வரித்துறை சோதனையில் கோடி, கோடியாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மார்ட்டின் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவை : வருமான வரித்துறை சோதனையில் கோடி, கோடியாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மார்ட்டின் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நாடு முழுவதும் உள்ள எங்கள் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கடந்த 3-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 3-ம் தேதி முதல் 4-ம் தேதி இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது. அதில், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள எங்களது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தொகையின் மதிப்பு ரூ. 98,820 ஆகும். இதற்கான சட்டப்பூர்வ கைப்பற்றுதல் படிவமானது, வருமான வரித்துறையின் உதவி இயக்குநரால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 நாட்கள் கோவையில் உள்ள எங்களது வீட்டினுள் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டதாகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தவறான செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த காணொளியின் புகைப்படங்கள் சில செய்தித் தாள்களிலும் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் உள்ளவாறு எந்தவொரு நிகழ்வும் எங்களது வீட்டில் நடைபெறவில்லை. மேலும், அதில் காண்பிக்கப்பட்டவாறு எந்தவொரு அறையோ, கட்டிலோ மற்றும் படிக்கட்டுகளோ எங்கள் வீட்டில் இல்லை. அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. அந்த காணொளிக்கும், எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன், என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.