கோவை : மத்திய பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த காவிய வர்ஷினி என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

10-ம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், கோவை புலியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி மாணவி காவிய வர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி காவிய வர்ஷினி, தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

பீளமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாபு என்பவரின் மகளான இவர், பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் தனது படிப்பிற்கு ஊக்கம் தந்ததாகவும், அன்றைய பாடத்தை அன்றே படித்ததாலும், புரிந்து படித்ததாலும் தன்னால் இந்த சாதனையை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ள காவியவர்ஷினி, எதிர்காலத்தில் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்து ஆன்காலஜி துறையில் பயில இருப்பதாகவும், யு.பி.எஸ்.இ. தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.