கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள விடுதியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதில், பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்தி போதை மயக்கத்தில் இருந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள விடுதியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதில், பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்தி போதை மயக்கத்தில் இருந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேத்துமடை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. வார இறுதியை கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து இங்கு வந்து கொண்டாடி செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கோவையில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள 100-க்கும் மேற்பட்டோர் இந்த சொகுசு விடுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி, அக்கம்பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், இது தொடர்பாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கொகைன், போதை ஊசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொடர்ந்து, சோதனை நடத்தி வரும் போலீசார், அங்கு மது, கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களின் மூலம் கேளிக்கை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 159 பேரை கைது செய்தனர். அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் இந்த சொகுசு விடுதியில், கொண்டாட்டம் என்ற பெயரில் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது அங்குள்ள பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.