கோவை : கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் 5 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை : கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் 5 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
கவுண்டம்பாளையம் பகுதியை அடுத்த இடையர்பாளையம் அருகே கரூர் வைஸ்யா வங்கி சொந்தமான ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இன்று அதிகாலை 12 மணியளவில் 3 பேர் பணம் எடுப்பது போல் உள்ளே நுழைந்தனர். பின்னர், இரண்டு பேர் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே சென்றனர். இதையடுத்து, திடீரென ஏ.டி.எம். மையத்திற்குள் இருந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பை வைத்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்தார். அப்போது, எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, உள்ளே இருந்தவர் கையில் வைத்திருந்த பைப்பை விட்டு விட்டு தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து, வெளியே இருந்தவர்களும் தப்பி ஓடினர்.

இந்த நிலையில், மீண்டும் சிறிது நேரத்தில் வந்து பைப்பை எடுத்துச் சென்ற நபர், சிறிது நேரத்தில் எச்சரிக்கை அலாரம் சத்தம் நின்றவுடன் உள்ளே நுழைந்து பெட்டியை உடைக்க முயற்சி செய்தார். நீண்ட நேரம் போராடியும் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாமல், திணறிய கொள்ளையன் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு, கைரேகைகளை தான் அணிந்திருந்த சட்டையை கொண்டு அழித்து விட்டு தப்பி சென்றுவிட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை கொண்டு விசாரணை செய்தனர். அதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான பாலாஜி, புவனேஸ்வரன், ரங்கராஜன் என தெரியவந்தது. மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் மேற்பார்வையிலான உதவி ஆய்வாளர் பிராங்கிளின் தலைமைக் காவலர் ராஜு தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பின்னர், இவர்களை சுமார் 5 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், இவர்கள் மதுபோதையில் திட்டமிட்டு இந்த செயலை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறிய 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.