கோவை : குப்பையில்லா தூய்மை நகரங்களுக்கான (ஸ்வச் சர்வேக்ஷான்) தரவரிசைப் பட்டியலில் சிறந்த இடத்தைப் பிடிக்கும் நடவடிக்கையாக, பல்வேறு முக்கிய திட்டங்களை கோவை மாநகராட்சி வகுத்துள்ளது.
கோவை : குப்பையில்லா தூய்மை நகரங்களுக்கான (ஸ்வச் சர்வேக்ஷான்) தரவரிசைப் பட்டியலில் சிறந்த இடத்தைப் பிடிக்கும் நடவடிக்கையாக, பல்வேறு முக்கிய திட்டங்களை கோவை மாநகராட்சி வகுத்துள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் குப்பையில்லா தூய்மை நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. கடந்த 2017 மற்றும் 18-ம் ஆண்டுகளில் 16 இடத்தில் இருந்த கோவை மாநகர், 2019-ம் ஆண்டுக்கான தரவரிசையில், 40-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் பட்டியலில் கோவை மாநகரை மீண்டும் முன்னோக்கிக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சியின் ஆணையர் ஜே. ஸ்ரவன் குமார் திட்டமிட்டுள்ளார். அதாவது, தரவரிசையில் சிறப்பான இடத்தைப் பிடிக்க குப்பை ஆலை முக்கியக் காரணியாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் கூறியதாவது :- உக்கடம் பகுதியில் அமையவிருக்கும் இந்த குப்பை ஆலை செயல்படுவதில் முந்தைய ஒப்பந்ததாரரின் மூலமாக சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதாவது, இதற்கு தேவையான இயந்திரங்கள் துறைமுகத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், திட்டமிடப்பட்ட ஆலையில், அந்த இயந்திரங்களை தற்போது பொருத்துவது இயலாத காரியமாகி விட்டது. எனவே, இந்த மாதத்தில் புதிய ஒப்பந்தத்திற்கான டெண்டரை விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, குப்பை நவீன ஆலை தயாராகிவிட்டால், வரும் ஆண்டில் சிறந்த தரவரிசையை நாம் பிடிக்க முடியும். குப்பையில்லா தூய்மை நகரங்களுக்கான தரவரிசையில் கோவை மாநகர் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காகும். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் அந்த இலக்கை நாம் அடைவோம்.
மேலும், நமது மண்டல அதிகாரிகள், களப் பணியாளர்கள் உள்பட 60 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழு நாள்தோறும் கவனத்துடன் செயல்பட்டு பிரச்சனைகள் மற்றும் விவரங்களை ஆராய உள்ளனர். ஸ்வச் சர்வேக்ஷான் திட்டத்தின் நடைமுறைகள் தற்போது மாற்றப்பட்டு விட்டன. அதாவது, இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள நகரங்கள் தினமும் புள்ளி விவரங்களை ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். எனவே, இதனை எங்கள் குழு மனதில் வைத்து, கோவை மாநகரின் தரவரிசையை உயர்த்த பாடுபட வேண்டும், என்றார்.
மேலும், உக்கடம் பகுதியில் கட்டப்படும் நவீன குப்பை ஆலையின் கட்டுமானப் பணிகள் தற்போது தாமதமாகி இருந்தாலும், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், அதன் கட்டுமானப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். புதிய டெண்டர் விடப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நவீன குப்பை ஆலை உருவாக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் தெரிவித்தார்.