கோவை : தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேர் தங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், 30 தி.மு.க., எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
கோவை : தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேர் தங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், 30 தி.மு.க., எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- கடந்த இரண்டரை ஆண்டுகளாக தி.மு.க.வும், டி.டி.வி.யும் இந்த ஆட்சியை அகற்றிவிடுவோம் என்று கூவி வருகிறார்கள். ஆனால், மக்கள் செல்வாக்கோடு சிறப்பாக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு வரை இந்த ஆட்சி நீடித்தால், ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் எதிர்காலம் இருக்காது என்பது தெரிந்துதான், அவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதற்கு ஏஜெண்டாக ஸ்டாலின் உறவினர் ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
அ.ம.மு.க.விற்காக வாதாட காங்கிரஸை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்வி மற்றும் கபில் சிபில் ஆகியோர் வருகின்றனர். ஆனால், முதலில் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய பின்னர் தான் தினகரனை சந்திக்கிறார்கள். அப்படியென்றால், அவர்களுக்குள் ரகசிய உறவு இருப்பது உண்மை தானே. கடந்த 3 மாதங்களுக்கு முன் கூட இருவரும் ரகசியமாக சந்தித்துள்ளனர். செந்தில் பாலாஜியை தி.மு.க.விற்கு அனுப்பி, மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து, இன்று வேட்பாளராக்கியது அனைத்தும் ஸ்டாலினும், தினகரனும் இணைந்து நடத்தும் நாடகம் என்பது தெளிவாக தெரிகிறது.
2011-ம் ஆண்டே அவரை அம்மா வெளியேற்றிவிட்டார். 3 எம்.எல்.ஏ. மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால் ஸ்டாலின் ஏன் பதறுகிறார். டி.டி.வி.க்கு ஏன் வக்காலத்து வாங்குகிறார் ஸ்டாலின். அம்மா மறைவிற்கு பிறகு, ஒரு சிலர் பின் ஏமாந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு பொது எதிரி தி.மு.க.. ஆனால் டி.டி.வி., தி.மு.க.வுடன் ரகசிய உறவில் இருக்கிறார். அதற்கு செந்தில் பாலாஜியை துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருகிறார் தினகரன்.
தி.மு.க.வில் கூலிக்கு ஆள் பிடித்து கட்சி நடத்துவதாக மு.க. அழகிரியே கூறி இருக்கிறார். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி டெபாசிட் இழக்கும். இதுவே, அவர்களுக்கு கடைசி தேர்தலாக அமையும். ஸ்டாலினும், தினகரனும் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள். ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் ஏஜெண்டாக செயல்படுவது அவரது மருமகன் சபரீசன். 3 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்கான ஆதாரம் கொறடாவிடம் உள்ளது. அதன் அடிப்படையிலேயே, சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின் ஏன் பதறுகிறார்.
தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் எங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், 30 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள். ஸ்டாலின் டுட்டோரியல் காலேஜ் முதலமைச்சராகக் கூட ஆக முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.