கோவை : கோவையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்ட போலீசா, அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் மற்றும் அவரது தகாத உறவு காதலனை கைது செய்தனர்.
கோவை : கோவையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்ட போலீசா, அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் மற்றும் அவரது தகாத உறவு காதலனை கைது செய்தனர்.
கடந்த 27-ந் தேதி மாலை கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர், ரூ. 2 கோடி மதிப்புள்ள 804 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணின் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் பெருமாள் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், நிதிநிறுவன ஊழியர்களான போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி (26), கெம்பட்டி காலனியை சேர்ந்த திவ்யா (24) ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்ததில், ஊழியர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் இரண்டு ஊழியர்களிடமும் தனித்தனியாக வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கிடைத்தது.
ரூ. 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இந்த கிளையில் இருப்பது வெளியாட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால், இந்நிறுவன ஊழியர்கள் தொடர்பு இல்லாமல் இந்த கொள்ளை நடக்க வாய்ப்பு இல்லை என்பதை போலீசார் உறுதிபடுத்தினர். குறிப்பாக, ஊழியர் ரேணுகா தேவியின் செல்போனுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகள் போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், கெம்பட்டி காலனியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. ஆனால், முத்தூட் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்கும் போது, ரேணுகாதேவியுடன் சுரேஷிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. மேலும், தகாத உறவு காதலன் சுரேஷின் சதி வலையில் விழுந்த ஊழியர் ரேணுகாதேவி, கொள்ளை சம்பவத்திற்கு துணை போயுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சுரேஷ் அளித்த தகவலின் பேரில், கொள்ளையடிக்கப்பட்ட 804 பவுன் நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டது. மேலும், முத்தூட் நிதி நிறுவன பெண் ஊழியர் ரேணுகாதேவியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் துணையாக இருந்த சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.