கோவை : ராமநாதபுரம் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : ராமநாதபுரம் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த நிறுவனத்தில் பணியில் ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண் ஊழியர்கள் இருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து பெண் ஊழியர்கள் இருவரையும் தாக்கி நகை பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார்.

முகமூடி அணிந்து வந்த நபர் தாக்கியதில் மயக்கம் அடைந்த பெண் ஊழியர்கள், சம்பவம் குறித்து தங்கள் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்தூட் நிறுவனம் மற்றும் கீழே இருந்த அரிசி கடை ஆகிய இடங்களில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அதில், முகமூடி அணிந்த நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அந்நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையில் வெளியாட்கள் ஈடுபட்டு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என சந்தேகித்த போலீசார், அந்த நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கொள்ளை வழக்கில் சுரேஷ் என்பவரை கேரளாவில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முத்தூட் நிதி நிறுவன பணியாளர் ரேணுகா தேவியை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.