கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஜி. மயில்சாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஜி. மயில்சாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மே 19-ம் தேதி நடைபெறும் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் ஜி. மயில்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
65-வது வயதான மயில்சாமி சூலூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஆவார். விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரங்களை இவரே தயாரித்து வருகிறார். மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலம் பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, உழவர் உழைப்பாளர் விவசாய சங்கத்தின் பொருளாளராகவும் இருந்துள்ளார்.

"நான் இயற்கை விவசாயத்தின் ஆர்வலராக இருப்பதால், சூலூரில் இயற்கை விவசாயத்தை மேல்நோக்கி எடுத்துவர கடுமையாகப் போராடுவேன்," என்கிறார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி.
மேலும், சுத்தமான, சீரான குடிநீர் விநியோகம், சூலூர் தொகுதிக்குட்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பது, பாதுகாப்பது மற்றும் சூலூர் தொகுதியில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவது போன்ற திட்டங்களை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.