கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது, பாரபட்சத்துடன் செயல்படுவதாக போலீசாருடன், நாம் தமிழர் கட்சியினர் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது, பாரபட்சத்துடன் செயல்படுவதாக போலீசாருடன், நாம் தமிழர் கட்சியினர் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

வரும் மே மாதம் 19-ம் தேதி நடக்கும் சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை முதல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவரது வாகனத்தை அனுமதிக்காத போலீஸார், வேட்பாளர் விஜயராகவன் உடன் நான்கு நபர்களை மட்டும் அனுமதித்தனர்.

ஆனால் இதைத் தொடர்ந்து, வந்த தி.மு.க.வின் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை வாகனத்தோடு செல்ல போலீஸார் சம்மதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொங்கலூர் பழனிச்சாமியின் வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகளுடன் உள்ளே சென்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் கூறுகையில், "நீர் ஆதாரங்களின் பிரச்சனையை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம். தேர்தல் விதிமுறைப்படி 100 மீட்டர் முன்பாகவே எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க. வேட்பாளர் வாகனம் மட்டும் வாயில் வரை அனுமதிக்கப்படுகின்றது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கின்றோம்," என்றார்.